ஜேர்மனி மரத்தில் பணம்

ஜேர்மனி நாட்டில் மரம் ஒன்றிலிருந்து கட்டு கட்டாக பணம் மழையாக பொழிந்ததால் சாலையில் சென்ற நபர்கள் குழப்பத்தில் ஆழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Mecklenburg-Upper Pomerania என்ற நகருக்கு அருகே உள்ள Mirow என்ற முகாம் பகுதியில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சாலையில் நபர்கள் சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த மரம் ஒன்றிலிருந்து கட்டு கட்டாக பணம் கீழே விழுந்துள்ளது.

இந்த காட்சியை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்து பணத்தை சேர்க்க தொடங்கியுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு வந்த அந்த முகாமின் உரிமையாளர், இவை அனைத்து தனது பணம் என கூறி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்து ஆராய்ந்த பொலிசார், மரத்தில் உள்ள கிளைகளில் ஒன்றில் ஒரு பண மூட்டை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.

பிளாஸ்டிக் மூட்டை நன்றாக கட்டப்பட்டு இருந்தாலும், அண்மையில் ஜேர்மனியை கோடை வெயில் தாக்கியதில் பிளாஸ்டிக் மூட்டை உருகி, அதனுள் இருந்த பணம் கீழே விழத்தொடங்கியுள்ளது.

மூட்டைக்குள் 50 யூரோ நோட்டுகள் என மொத்தம் 2 லட்சம் யூரோக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டு பிடித்தனர்.

முகாம் பகுதியில் அந்த உரிமையாளரின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதால், பண மூட்டையை மரத்தில் மறைத்து வைத்தாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது குடும்பத்தில் பல பிரச்சனைகள் உள்ளதாக அங்கு குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளதால், அந்த பணத்தை அவரிடம் பொலிசார் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

மேலும், பணத்தை கண்டுபிடித்த சாலை சென்ற நபர்கள் தங்களுக்கு அந்த தொகையிலிருந்து 3 சதவிகிதம்(6000 யூரோ) பங்கு வேண்டும் என்றும், பணத்தின் உண்மையான உரிமையாளர் அடுத்த 6 மாதத்திற்குள் வரவில்லை என்றால், முழு பணத்தையும் தாங்களே வைத்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.