கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
இன்று, அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட வருமாறும் அமைச்சர் ஹக்கீம் த.தே.கூ மற்றும் ஐ.தே.க.விடம் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியில் இருந்த ஐ.ம.சு.மு. ஆட்டம் கண்டிருந்த நிலையில், மு.கா.வினர் ஐ.ம.சு.மு.வின் துணையுடன் கிழக்கில் நேற்று முன்தினம் ஆட்சியமைத்தனர். மு.கா.வின் இந்த நடவடிக்கை த.தே.கூ. மற்றும் ஐ.தே.க. வட்டாரங்களிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
