ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 45 பொதுமக்கள் உயிரோடு எரித்துக்கொலை

மேற்கு ஈராக்கின் அல்-பக்தாதி பகுதியில் 45 பொதுமக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக ஈராக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் யார்? எங்கு வைத்துக் கொலைசெய்யப்பட்டார்கள் என்ற தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், கொல்லப்பட்டவர்களில் சிலர் ஈராக்கிய பாதுகாப்புப் புரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அல்-பக்தாதி பொலிஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் அன் அல்-ஆசாத் விமானத்தளத்திற்கு அருகாமையில் உள்ள நகரத்தை கடந்த வாரம் கைப்பற்றியிருந்தனர். இதனால், அங்கிருக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்களை கடத்திக் கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் தொடர்பாடல் நடவடிக்கைகள் மோசமாக இருப்பதால், சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இச்சம்பவம் தொடர்பில், ஈராக்கிய அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் உதவியையும் அவர் கோரியுள்ளார்.