ஐ.எஸ் தீவிரவாதிகளால் பணயக்கைதியாக சிரியாவில் பிடிக்கப்பட்டிருந்;த அமெரிக்கப் பெண் கைலா ஜீன் முல்லர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார். அமெரிக்கா அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான கைலா ஜீன் முல்லர் ஒரு தொண்டு நிறுவனப் பணியாளர் ஆவார்.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிரியாவில் வைத்து இவர் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து 18 மாத காலப்பகுதியாக பணயக் கைதியாக பிடிக்கப்பட்டிருந்த கைலா ஜீன் முல்லர், ஜோர்தான் நடத்திய வான் வழித்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.
இதேவேளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆதாரம் காணப்படாத காரணத்தால் அமெரிக்கா ஜீன் முல்லரின் உயிரிழப்பை ஏற்க மறுத்திருந்த நிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி, ஜீன் முல்லர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தொண்டு நிறுவனப் பணியாளரான ஜீன் மில்லரின் கொலைக்குக் காரணமானவர்களை எவ்வளவு காலம் சென்றாலும் தேடிப் பிடித்து நீதிக்கு முன் நிறுத்துத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்ட பின்னர் மில்லர் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும் தற்போது அவர் கொல்லப்பட்டு விட்டதாக தமக்கு வந்த செய்தியால் மனம் உடைந்து போயுள்ளோம் என்றும் மில்லரின் பெற்றோர் தமது கவலையை வெளியிட்டுள்ளனர். இதேவேளை ஜீன் மில்லரே ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் காணப்பட்ட இறுதி அமெரிக்க பணயக் கைதி என்பது குறிப்பிடத்தக்கது.
