லண்டனில் இரட்டைத் தட்டு பேரூந்து விபத்து

லண்டனின் மேற்குப் பகுதி ஹொல்போர்ன் கிங்ஸ்வேயில் பயணித்த 91 ஆம் இலக்க இரட்டைத் தட்டு பேரூந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த பேரூந்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து குறித்த பகுதிக்கு வந்த அவசர சேவை குழுவினர் பேரூந்தின் மேல் பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் அதனை வீதியிலிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த விபத்தால் அப்பகுதி மக்கள் வீதியில் திரண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அம்புலன்ஸ் பணியாளர்கள் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

லண்டன் தீயணைப்பு நிலைய முகாமையாளர் Gary Squires தெரிவிக்கையில்; பேரூந்து பலத்த விபத்துக்குள்ளானபோதிலும் அதில் பயணித்தவர்கள் கடுமையான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியதாக கூறினார்.

இதேவேளை விபத்து இடம்பெற்றதற்கான காரணம் இதுவரை சரியாக வெளிவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.