ஸ்மார்ட் போன்களை மக்கள் எப்படி பாக்குறார்கள் ஆய்வுத் தகவல்

ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன.

“தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் சிற்றலைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு முறையும் இவற்றின் பயன்பாடு மேம்படுத்தப்படும்போது, நாமும் தொடர்ச்சியாக அதைக் கற்றுக்கொண்டே வருகிறோம். இது நம் மனங்களை போன் சார்ந்த உணர்ச்சிகளுடன் பிணைக்கிறது” என்கிறார் லாக்பரோ பல்கலைக்கழக வடிவமைப்பு கல்வி மையத்தைச் சேர்ந்த டாம் பேஜ்.

எவ்வாறு ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காகத் தங்கள் ஸ்மார்ட்ஃபோனை நம்பியுள்ளனர், நேரத்தையும் பணத்தையும் எப்படி இதனுடன் செலவழிக்கின்றனர் என்பது குறித்த புரிதல் உற்பத்தியாளர்களுக்கிடையே நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

அதேநேரத்தில் இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், வணிகர்கள், தொழில்முனைவர்கள் போன்றோர் தங்களது ஸ்மார்ட்ஃபோன்களை போகிற போக்கில் பயன்படுத்தி, அதனை பணி நிமித்தமான திறனை வெளிப்படுத்தவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் செய்கின்றனர் என்கிறது அந்த ஆய்வு.