விவசாயக்கிணற்றில் தவறி விழுந்து நான்கு வயதுச்சிறுமி உயிரிழப்பு

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில் 90 ஏக்கர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற விவசாயக் கிணறு ஒன்றினுள் தவறி வீழ்ந்துள்ள 04 வயதுச் சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளார். பின்னர் காணாமல் போன சிறுமியைத் தேடிய போது சிறுமியின் வீட்டுக்கு அண்மையில் உள்ள பாதுகாப்பற்ற விவசாயக் கிணறு ஒன்றினுள் சிறுமி வீழ்ந்திருந்ததை அவதானித்துள்ளனர்.

பின்னர் உடனடியாக கிணற்றிலிருந்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிறுமி உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுமியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.