நிறுவன பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும்

பிரித்தானிய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரன் இன்றைய தினம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய வர்த்தக சம்மேளனத்தில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வின் போது ஆற்றவுள்ள உரையில் டேவிட் கமரன் இது தொடர்பில் வலியுறுத்துவார் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இங்கிலாந்தில் பொருளாதாரம் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என நிறுவனங்களை அவர் கேட்டுக்கொள்ளவுள்ளார்.

பொருளாதாரத்தில் அடைந்துள்ள வெற்றிகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஐந்தொகைக் கணக்குகளில் மாத்திரம் வெளியிடுவது சிறந்தது அல்ல. மக்களின் வாழ்க்கை முறை, ஊதியம் மற்றும் வங்கிக் கணக்குகள் பொருளாதாரத்தில் பெற்றுள்ள வெற்றிகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என டேவிட் கமரன் கருதுகின்றார்.

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக ஊதியம் அதிகரித்து வருவதனை தரவுகள் சுட்டிக்காட்டுவதாகவும், பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்துவரும் நிலையில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் ஊதியத்தை மேலும் உயர்த்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிடவுள்ளார்.