தாய்வான் நாட்டிற்கு சொந்தமான ட்ரான்ஸ் ஏசியா உள்நாட்டு பயணிகள் விமானம் பாலமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி தாய்பே கீலங் ஆற்றில் விழுந்ததில் 8 பேர் உயிரழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். 5 விமான அதிகாரிகள் உட்பட 58 பேருடன் தைப்பே சொங்ஷன் விமானநிலையத்திலிருந்து தாய்லாந்தின் Kinmen islands இற்குப் புறப்பட்ட ஏ.ரி.ஆர் 72 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதேவேளை, விபத்துக்குள்ளாகி கீலங் ஆற்றில் விழுந்துள்ள விமானத்தின் பெரும்பகுதி ஆற்றினுள் மூழ்கியுள்ளது போன்ற புகைப்படங்களை தாய்வான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், விபத்து இடம்பெற்ற பகுதிக்கு வந்துள்ள மீட்புப்படையினர் மற்றும் இராணுவத்தினர் விமானத்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, சிலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விமானத்தினுள் சிக்கியுள்ள 30 இற்கும் மேற்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்புப்படைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த வருடம் ஜூலை மாதம் அளவில் தாய்வானில் மோசமான காலநிலை காரணமாக விபத்துக்குள்ளான ட்ரான்ஸ் ஏசியா விமானத்தில் பயணித்த 48 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
