கொழும்பிலுள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்ட குழந்தை இறந்தமை தொடர்பில் விசாரணை

சந்தேகத்திற்கு இடமான முறையில் கொழும்பிலுள்ள விடுதியொன்றில் குழந்தை ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டரை வயதான இந்த குழந்தை நேற்றிரவு கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

கொழும்பிலுள்ள விடுதியொன்றில் குழந்தை உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

குழந்தை, தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கொழும்பு 12 மெசஞ்ஜர் வீதியிலுள்ள விடுதிக்கு இன்று (05) மாலை சென்ற, புதுக்கடை நீதவான் நிஷாந்த பிரீஸ் விசாரணைகளை முன்னெடுத்தார்.

கடந்த 8 மாதங்களாக மேலும் மூன்று குழந்தைகளுடன் யாசகத்தில் ஈடுபடும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இந்த விடுதியில் தங்கியிருந்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த குழந்தையை விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் என கூறப்படும் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.