பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று தெரியுமா?

உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழிக்கேற்ப, உப்பு இல்லாத உணவை சாப்பிடவே முடியாது. அந்த அளவில் உண்ணும் உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய உப்பை சிலர் பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள்.

இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன.

சுவை அதிகமாகும்

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், உண்ணும் பழங்களின் சுவை அதிகமாகும். குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சை வாசனை தெரியாது. இதனால் தான் பலரும் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள்.

கருமையாவதைத் தடுக்கும்

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதன் மூலம், பழங்கள் கருமையாவதோ அல்லது ப்ரௌன் நிறத்தில் மாறுவதோ தடுக்கப்படும்.

ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட்

பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுத்து, பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு பயன்படும்.

சிறந்த கிளின்சர்

முக்கியமாக உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படும். பிரஷ்ஷான பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால், அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீங்கிவிடும்.

அசிடிட்டி

அதிக அமிலங்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவை வயிற்றில் அதிக அளவில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இப்பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக இருப்பதோடு, அசிட்டிக் pH 3-3.3 உள்ளது. இப்பழங்களுடன் உப்பு சேர்த்து உட்கொண்டால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்

சோடியம்-பொட்டாசிய சமநிலை

சோடியம் குறைவாக சேர்ப்போர் பழங்களில் லேசாக உப்பு தூவிக் கொள்வது நல்லது. ஏனெனில் பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். உடலில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருந்தால், பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். எனவே பழங்களில் அளவாக உப்பை சேர்த்துக்கொண்டால், உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சமநிலையுடன் இருக்கும்.