வடமாகாண சபையின் இன்றைய அமர்விற்கு முன்னர், மாகாண சபை கட்டட தொகுதிக்கு முன்பாக வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாகாண சபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு கூடிய வேலையில்லாப் பட்டதாரிகள் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
மாகாண சபை அமர்வில் இது தொடர்பில் கலந்துரையாடுவதாக தெரிவித்து, அமர்வில் கலந்துகொள்வதற்காக இருவரும் உள்ளே சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு முன்பாக வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாகாண சபை அமர்வின் இடைவேளையின்போது, முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மீண்டும் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
