இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்டுள்ள 1000 வருடம் பழமையான தங்க நாணயப் புதையல்

இஸ்ரேலின் மத்தியதரைக் கடல் பகுதியில் 2000 இற்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் அடங்கிய பெறுமதிமிக்க புதையல் ஒன்றை ஸ்கூபா சுழியோடிகள் கண்டெடுத்துள்ளனர். முன்னொருபோதும் யாரும் காணாத அரிய வகை நாணயங்கள் அடங்கிய இந்த புதையல், எதிர்பார்க்காத வேளையில் ஸ்கூபா சுழியோடிகளுக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் பாவிக்கப்பட்ட இந்த தங்க நாணயங்கள் மிகப் பெறுமதியானவை என இஸ்ரேல் தொல்பொருள் அதிகார சபை கூறியுள்ளது.

மேலும் இஸ்ரேல் ஸ்கூபா சுழியோடிகள் கழகத்தைச் சேர்ந்த சுழியோடிகளே முதன்முதலில் இந்த தங்கப் புதையலைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது இவற்றை போலியான விளையாட்டுப் பொருள் என முதலில் நினைத்த சுழியோடிகள், பின்னர் தான் அவற்றின் முக்கியத்துவம் தமக்குப் புரிந்ததாக ஆச்சரியம் விலகாமல் கூறியுள்ளனர்.

அத்துடன் தாம் இந்த புதையலை முதலில் கண்டதும் அதில் பெருமளவான நாணயங்களை எடுத்துக் கொண்டு உடனடியாக கரைக்கு வந்ததாவும் அதனை தமது சுழியோடிகள் கழக நிர்வாகியிடம் கையளித்தாகவும் புதையலைக் கண்டெடுத்த சுழியோடிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்கப்புதையல் விலை மதிக்க முடியாத மிகப் பெறுமதியான ஒன்று என தொல்பொருள் அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.