பதவியேற்று ஒரு மாதம் நிறைவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாத காலமாகின்றது. இந்த நிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கால அளவில் 30 நாட்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 70 நாட்கள் மீதமாகவுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினைக் கொண்டுவந்து 12 வகையான அத்தியாவசியப் பொருட்களிற்கான விலையினைக் குறைத்துள்ளது. மேலும் எரிபொருள் மீதான வரி குறைப்பும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பஸ் போக்குவரத்திற்கான கட்டணம் 8 தொடக்கம் 10 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் தடுப்பு போன்ற செயற்திட்டங்களை புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மேலும் ஒரு இலட்சம் புதிய வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் நீடித்த தேசிய இனப்பிரச்சனை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. அத்துடன் புதிய அரசாங்கம் அரச செலவீனங்களை வெகுவாகக் குறைத்து அதனை பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கிவருகின்றது. அந்த வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வை 10000 ரூபாவால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.