சிரியாவில் வான்வழித் தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு

சிரிய தலைநகர் டமஸ்கஸில் மேற்கொள்ளப்பட்ட றொக்கட் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் சிரியாவில் இடம்பெற்றுவரும் கடும் மோதலில் மேற்கொள்ளப்படும் குண்டுத்தாக்குதல் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பது படமாக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலை முழுவதும் நோயாளர்களால் நிரம்பிக் காணப்படுவதாக வைத்திசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிரியாவின் கிழக்கு கவுடா (Ghouta)  மாநிலத்தில் நிலைகொண்டுள்ள கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சிரிய படையினர் நேற்று வியாழக்கிழமை மட்டும் 40 இற்கும் மேற்பட்ட வான் வழித்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த வான்வழித்தாக்குதலில் 57 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவிற்கான மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.